முதற்கட்டமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அமைக்க முடிவு: அரசு அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்க டெண்டர்; பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் தகவல்
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மின் செலவை குறைக்கும் நோக்கிலும் தமிழகத்தில் அரசு துறைக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சூரிய சக்தி பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டமானது அமலில் உள்ளது. குறிப்பாக, தலைமைச்செயலகம், மாநகராட்சி அலுவலகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்களில் சோலார் பேனல்கள் அமைக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளன. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் கட்டிடத்தின் மின் பயன்பாட்டினை தீர்க்க உபயோகமாக உள்ளன.
இதனால் மின் கட்டணம் என்பது கணிசமாக குறைகின்றன. அதன்படி, தமிழகத்தில், அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க கடந்த 2023ம் ஆண்டு அரசு முடிவு செய்து அதற்கான திட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் 40 மெகாவாட் திறனுடைய சோலார் பேனல்களை அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்தவகையில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் சோலார் பேனல்கள் கடந்த சில வருடமாக அமைக்கப்பட்டு வரும் நிலையில் அரசு கட்டிடங்களிலும் சோலார் பேனல்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டன. அதன்படி, 40 மெகா வாட்டுக்கான சோலார் பேனல் டெண்டரை அறிவித்துள்ளோம்.
முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்களில் அமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இத்திட்டத்தை மேற்கொள்வதற்காக தகுந்த கட்டிடங்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் பல இடங்களை தேர்வு செய்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். இதில் ஐந்து கிலோ வாட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் (அ) அதிக மின்சாரம் பயன்பாட்டுடன் கூடிய அரசு கட்டிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சோலார் பேனல்கள் அமைக்க கட்டிடத்திற்கு 2-10 சதுர அடி வரை தேவைப்படும். அதுபோன்ற இடங்களை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டெண்டரில் அக்.15 - 27 வரை நிறுவனங்கள் தங்களின் ஏலத்தொகையை சமர்ப்பிக்கலாம். அக்.28ம் தேதி ஏலம் திறக்கப்படும்.
இதன் திட்ட செலவாக தோராயமாக ஒரு மெகாவாட் சூரிய சக்தி அமைப்பிற்கான மதிப்பீடாக ரூ.6 கோடி இருக்கும் என கணித்துள்ளோம். ஆனால் அவை சந்தையை பொறுத்து மாறலாம். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் 40 - 50 சதவீதம் வரை அரசு அலுவலகங்களுக்கு மின் கட்டண செலவும் குறையும். இதனால் அரசின் ரூ.2 ஆயிரம் கோடி மின்சார நிலுவை தொகை பாக்கியை சரிசெய்ய கட்டாயம் உதவும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சோலார் பலன்கள்
* ஒரு அரசு கட்டிடத்தில் 10 கிலோவாட் சோலார் அமைத்தால் ஆண்டுக்கு 15 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை தவிர்த்து இயற்கையை பாதுகாக்கும்.
* சோலார் பேனல்கள் பசுமை ஆற்றலான சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதால் மாசு ஏற்படாது.
* சோலார் சிஸ்டம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வரை வேலை செய்யும் திறன் வாய்ந்தது.
* அரசு கட்டிடங்களுக்கு சுமார் 5-7 ஆண்டுகளில் முதலீடு மீட்கும் வாய்ப்பு இருப்பதால் அதன் பிறகு 15 ஆண்டுகள் இலவச மின்சார பயன்பாடு கிடைக்க பெறக்கூடும்.
* சோலார் பேனல்கள் பேட்டரி மூலம் மின் சேமிப்பு செய்து மின் தடையின் போது தொடர்ச்சியான சேவையை வழங்க முடியும்
* ஆண்டுக்கு எவ்வளவு அரசுக்கு சேமிப்பு
தமிழகம் முழுவதும் அரசு கட்டிடங்களுக்கு சோலார் பேனல்கள் அமைக்கப்படும் பட்சத்தில் ஆண்டுக்கு மின்செலவீனம் எவ்வளவு சேமிக்கும் என்பதன் உதாரண பட்டியல்:
கட்டிடம் சோலார் திறன் சேமிக்கப்படும் தொகை
கலெக்டர் அலுவலகம் 50 கிலோவாட் ரூ.5 லட்சம் வரை
அரசுப்பள்ளி 5-10 கிலோவாட் ரூ.50,000-1 லட்சம் வரை
அரசு மருத்துவமனை 100-250 கிலோவாட் ரூ.10-25 லட்சம் வரை
* நெட் மீட்டரிங் முறை
சில அரசு கட்டிடங்களில் நெட் மீட்டரிங் முறை நடைமுறையில் உள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கி மீதமுள்ள மின்சாரம் கட்டணத்தில் கழிக்கப்படும். இது தமிழ்நாடு மின்பகிர்மான மற்றும் உற்பத்தி கழகத்தின் மூலம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு செயல்படுகிறது.