சென்னையில் வரும் 13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து முக்கிய ஆலோசனை
சென்னை: சென்னையில் வரும் 13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் நேரடியாக கண்காணித்து வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். வெளிமாவட்டங்களுக்கு சென்றாலும் கூட மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்து வருகிறார். மேலும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து இருந்தார். முதல்வர் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அதுவும் குடும்பம் குடும்பமாக திமுகவில் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த உறுப்பினர் சேர்க்கை இலக்கு என்பது கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 13ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் மாவட்ட திமுக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை பொருள் குறித்து விவாதிக்கப்படும்” என்றார்.