சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு!
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் (Electors Help Desk) 18.11.2025 முதல் 25.11.2025 வரை செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் - 2026 பணிகள் சென்னை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers-BLOs) வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளது.
இப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின்(Booth Level Agents-BLAs) பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பெற்று வழங்க அனுமதித்துள்ளது. அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி முகவர்கள் கீழ்கண்ட உறுதிமொழியையும் இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கவேண்டும்.
“என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதியளிக்கிறேன் எனவும், மேலும் தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு -31 -ன் படி தண்டனைக்குரியது என்பதையும் நான் அறிவேன்”
வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் தேதிகள்:
1. 18.11.2025(செவ்வாய்கிழமை)
2. 19.11.2025 (புதன்கிழமை)
3. 20.11.2025 (வியாழக்கிழமை)
4. 21.11.2025 (வெள்ளிக்கிழமை)
5. 22.11.2025 (சனிக்கிழமை)
6. 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை)
7. 24.11.2025( திங்கட்கிழமை)
8. 25.11.2025(செவ்வாய்கிழமை)
மேற்கண்ட எட்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும், மேற்படி வாக்காளர் உதவி மையங்களில் (Electors Help Desk) சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் துணையாக வரலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
வாக்காளர் உதவி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பின்வருமாறு:
1. சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் வழிகாட்டுதல்.
2. கணக்கீட்டுப் படிவங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கங்கள் வழங்குதல்.3. கணினி வசதி மூலம் வாக்காளர் விவரங்களை உடனடியாகச் சரிபார்த்து வழங்குதல்.
இந்த எட்டு நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் முக்கிய செயல்பாட்டு நாட்கள் என்பதால், வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.