சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விரைவு போக்குவரத்து அமைப்புடன் முதல் மேம்பாலம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்
சென்னை: சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலையில் தமிழகத்தின் முதல் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்புடன் கூடிய மேம்பாலம் அமைய உள்ளது. ஐடி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், குடியிருப்பு வளாகங்கள் என ஜிஎஸ்டி சாலையை ஒட்டி மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் கட்டாயம் கடந்து செல்ல வேண்டிய வாயில் இது. குறிப்பாக பண்டிகை காலங்களில், வாயலூர், செங்கல்பட்டு, ஊரப்பாக்கம், மாமல்லபுரம் சந்திப்புகளில் கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நிற்கும்.
தென் மாவட்டங்களுக்கான முக்கிய நுழைவாயிலான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. இது தமிழ்நாட்டில் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு வசதியுடன் கூடிய முதல் ஒருங்கிணைந்த மேம்பாலமாக மாறவுள்ளது.ரூ.3,300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த நவீன மேம்பாலம், கிளாம்பாக்கம் (ஊரப்பாக்கம்) முதல் மஹிந்திரா வேர்ல்டு சிட்டி (செட்டிப்புண்ணியம்) வரை 18.4 கிலோமீட்டர் தூரம் நீளும். ஒன்றிய அரசின் விரிவான ஆய்வுக்குப் பிறகு, மேம்பாலத்தின் அகலம் முதலில் திட்டமிடப்பட்ட 25 மீட்டரில் இருந்து 29 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் கூடுதல் லேன்கள் அமைக்கப்படும். இந்த கூடுதல் பாதைகள் இரட்டை நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவசரகால சூழ்நிலைகளில் வாகனங்களை ஓரமாக நகர்த்தி போக்குவரத்தை சீராக நிர்வகிக்க உதவும் அதே நேரத்தில், இவை பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்புக்கான தனிப்பட்ட பாதைகளாகவும் செயல்படும்.
பயணிகள் சுலபமாக மேம்பாலத்தை அடையும் வகையில், ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டர் இடைவெளியிலும் லிப்ட் (எலிவேட்டர்) வசதிகள் அமைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உருவாகும் இந்த மேம்பாலம், தற்போது இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 14 விபத்து அடிக்கடி நிகழும் புள்ளிகளில் (பிளாக்ஸ்பாட்கள்) விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்ளூர் போக்குவரத்தும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்படுவதால், குறிப்பாக பண்டிகை காலங்களில் ஏற்படும் கடுமையான நெரிசல் வெகுவாகக் குறையும். இந்த மேம்பாலம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமையவுள்ள சென்னை புறநகர் வளையச் சாலையுடன் இணைக்கப்படும். மேலும், ஐயஞ்சேரி மற்றும் காட்டாங்கொளத்தூர் சந்திப்புகளிலும் ஏறுவதற்கும் இறங்குவதற்குமான வழிகள் வழங்கப்படும்.
மதுரையில் அமைந்துள்ள 7.3 கிலோமீட்டர் நீளமுள்ள செட்டிக்குளம் மேம்பாலத்தைப் போன்றே, இந்த மேம்பாலமும் நவீன ஸ்டீல் கட்டமைப்பு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும். கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, வழித்தடத்தில் குறுக்கிடும் ஐந்து உயர் அழுத்த மின்சார இணைப்புகள் மாற்றி அமைக்கப்படும். ஆரம்பத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த திட்டத்துடன் ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்தது. எனினும், பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்ற காரணத்தால், அவர்கள் தனித்திட்டமாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மேம்பாலம் முழுமையாக செயல்பட்ட பின், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் போக்குவரத்து சூழல் மாற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு என்றால் என்ன?
பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு என்பது உலகளவில் பல நகரங்களில் பொது போக்குவரத்துக்கு பிரத்யேகமான முறையில் செயல்படுத்தப்படும் ஒரு முறையாகும். பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இது மிகச்சிறப்பாக செயல்படுகிறது.இந்தியாவில் அகமதாபாத், புனே, சூரத், இந்தூர் போன்ற நகரங்களில் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இந்த அமைப்பு செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப் புள்ளி
கிளாம்பாக்கம் முனையம் (ஊரப்பாக்கம்)முடிவுப் புள்ளி: மஹிந்திரா வேர்ல்டு சிட்டி (செட்டிப்புண்ணியம்)மொத்த நீளம்: 18.4 கிலோமீட்டர்மேம்பாலத்தின் அகலம்: 29 மீட்டர் (ஆரம்பத்தில் 25 மீட்டர் திட்டமிடப்பட்டது)
ரூ.3,300 கோடி கட்டுமான தொழில்நுட்பம்
ஸ்டீல் அமைப்புமதுரையின் செட்டிக்குளம் மேம்பாலம் (7.3 கிமீ) வெற்றிகரமாக செயல்படுவதால், அதே ஸ்டீல் கட்டமைப்பு முறை இங்கும் பயன்படுத்தப்படும்.