சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு!!
சென்னை : சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி 7 என்ற ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம் என்பவர் இயக்கினார். விமானம் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர் கழிவெளி பகுதியில் வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.பிற்பகல் 2 மணியளவில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, விமானத்தை இயக்கிய விமானி சுபம், அதை தரை இறக்க முயற்சித்தார். ஆனால் அதற்கு போதிய விமான தளம் இல்லாததால் விமானத்தை திருப்போரூர் புறவழிச் சாலையில் இறக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதில், போதிய அவகாசம் கிடைக்காத நிலையில், விமானத்தில் இருந்து விமானி சுபம் பாராசூட்டில் குதித்தார்.
இதனால் தாறுமாறாக இயங்கிய விமானம் தண்டலம், திருப்போரூர் கிராமங்களில் வீடுகளின் மேல் சுற்றியபடி வந்த விமானம் நெம்மேலி சாலையில் உள்ள தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் விழுந்து அப்பளமாக நொறுங்கியது. தனியார் உப்பு தொழிற்சாலையில் விபத்துக்குள்ளான விமானம் சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கியது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட ராணுவத்துறையினர் விமானத்தின் உதிரிப்பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 2வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் பயிற்சி விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கருப்புப்பெட்டியை ஆய்வுசெய்த பின்னர்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும். மீட்கப்பட்ட கறுப்புப்பெட்டியை டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.