சென்னையில் திருக்குறள் திருப்பணிகள்‘ திட்டம் தொடக்க விழா
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் 31.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழ் நாடு முழுவதும் ‘திருக்குறள் திருப்பணிகள்‘ திட்டம் செயற்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க சென்னை மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணி திட்டம் இன்று 11.09.2025 (வியாழக் கிழமை) முற்பகல் 10 மணிக்கு பெரம்பூர் சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர். ந. அருள் வரவேற்புரை ஆற்றினார்.
வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் பெருமாள், பெருநகர சென்னை மாநகராட்சி உதவி கல்வி அலுவலர்கள் எஸ். வேதவல்லி, செல்வகுமாரி, தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர் முனைவர் கு. மோகனராசு, உலக திருக்குறள் சமுதாய மையத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ம. சக்கரவர்த்தி, திருக்குறள் திருத்தூதர் முனைவர் குமரிச் செழியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். உலக திருக்குறள் சமுதாய மையத்தின் இணைச் செயலாளர் திருக்குறள் ஞானப்பீட விருதாளர் பேராசிரியர் முனைவர் இரா. ஆரோக்கியமேரி மற்றும் உலகத் திருக்குறள் சமுதாய மையத்தின் திருக்குறள் தூதர் எ. கோட்டீஸ்வரி ஆகியோர் திருக்குறள் திருப்பணி திட்டத்தில் பங்கு கொண்ட நூறு மாணவிகளுக்கு முதல் பயிற்சி வகுப்பு வழங்கினார்கள். 45 நிமிட திருக்குறள் பயிற்சிக்குப் பிறகு தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் வே. சாந்தி நன்றியுரையாற்றினார்.