சென்னை வாலிபர் வெட்டிக் கொலை தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக சென்னை வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பொன்நிமேஷ் (35). இவர், அப்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவரது சகோதரியை கேலி செய்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பொன்சேகர் மகன் சுபாகர்(32) என்பவருக்கும், பொன் நிமேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் பொன்நிமேஷ் தனது திருமண பத்திரிக்கையை கடந்த 26-4-2015 அன்று அங்குள்ள கோயிலில் வைத்து பூஜை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த பொன்சேகர் (70), அவரது மகன் சுபாகர் (32), உறவினர்கள் முருகேசன் மகன்கள் ரமேஷ் (30), சுரேஷ் (28) மற்றும் முருகன் மகன் மாடசாமி (31) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நீதிபதி தாண்டவம் நேற்று தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பொன்சேகர், சுபாகர், ரமேஷ், சுரேஷ் மற்றும் மாடசாமி ஆகிய 5 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.