சென்னையில் இன்று ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு
சென்னை: அரசுப் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் 2024 பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே 18ல் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, ஆசிரியர் பணிக்கு தேர்வான பட்டதாரிகளின் தகுதிப் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையே அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீடு பதவி உயர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சு பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் தற்போது 2,511 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் இன்று (செப்டம்பர் 3) பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதில் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் நாளையும் (வியாழன்) கலந்தாய்வு நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்த கலந்தாய்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்துடன் நேரில் வரவேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.