சென்னையில் நாளை முதல் டீ, காஃபி விலை உயர்த்தப்படும்: டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் நாளை முதல் டீ, காஃபி விலை உயர்த்தப்படும் (Tea and coffee prices increase in Chennai) என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீ ரூ.15 ஆகவும், காபி ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் டீ கடை வியாபாரிகள் சங்கம் ஒரு முடிவு எடுத்துள்ளது. இதில், சென்னையில், ரூ. 10, ரூ.12-க்கு விற்கப்பட்டு வரும் டீ யின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. டீ - காபிக்கு பயன்படுத்தப்படும் பால், டீ, காபி தூள் ஆகியவற்றி விலை உயந்துள்ளதால் அதன் காரணமாக டீ, காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு தரமான டீ மற்றும் காபி வழங்கும் வகையில் தான் அதன் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், பால், டீ, காபி தூள்கள், சர்க்கரை உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயர்வு, கூகுள் பே, போன் பே ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் போது அதற்கு ஜி. எஸ். டி. அதிகமாக வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து செலவு ஆகியவை காரணமாக டி, காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2022- ஆம் ஆண்டு ரூ.10- இல் இருந்து ரூ. 12- ஆக டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை ரூ. 15- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விலைப் பட்டியலை டீ கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இதில், டீ ரூ.15, பால் ரூ.15, லெமன் டீ ரூ.15, காபி ரூ.20, ஸ்பெசல் டீ ரூ.20, ராகி மால்ட் ரூ. 20, சுக்கு காபி ரூ. 20, பூஸ்ட் ரூ. 25, ஹார்லிக்ஸ் ரூ. 25 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, கப் டீ பார்சல் ரூ. 45, கப் பால் ரூ. 45, கப் காபி ரூ. 60, ஸ்பெஷல் கப் டீ ரூ. 60, ராகி மால்ட் ரூ. 60, சுக்கு காபி ரூ. 60, பூஸ்ட் ரூ. 70, ஹார்லிக்ஸ் கப் ரூ. 70 ஆகியவை பார்சல் விலைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (செப்டம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பெரிய அளவிலான கடைகளில் உள்ளே அமர்ந்து தேநீர் குடிக்கும் கடைகளில் ஏற்கெனவே ரூ. 15, ரூ. 20, ரூ. 25 ஆகிய விலைகளில் டீ மற்றும் காபி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, விலை உயர்த்தப்பட்டுள்ள டீ மற்றும் காபி விலை உயர்வு சாலையோர மற்றும் பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் டீ கடைகளுக்கானது. ஹோட்டல், ரெஸ்டாரன் உள்ளிட்ட கடைகளுக்கு தனியாக சங்கம் இருப்பதால் அந்த கடைகளுக்கு டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படவில்லை.