சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தெருநாய் தொல்லை: ஒவ்வொரு பகுதியிலும் நாய் காப்பகங்கள் அமைக்க கோரிக்கை
சென்னை: தெருநாய்களின் தொல்லை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக தண்டையார்பேட்டை சேனியம்மன், திலகர் நகர், குடிசை மாற்று வாரிய பகுதிகளில் மற்றும் 500க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட பெரும் அச்சம் நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தெருநாய்களை பிடித்து செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்திவிட்டு மீண்டும் தெருக்களில் விட்டுவிடுவதாக தெரிவிக்கின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறும் மக்கள், நாய்களுக்கு என்று ஒவ்வொரு பகுதியிலும் காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டிலேயே நாய்க்கடி பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக சேலம் மாவட்டம் உள்ளது.
25,000க்கும் மேற்பட்டோர் சேலத்தில் நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போன்று தமிழ்நாட்டிலும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.