சென்னையில் 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னையில் 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2021 முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 12,255 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. வெறிநாய்க்கடி நோய் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் தனிக் கூண்டுகளில் பராமாரிக்கப்படுகின்றன
சென்னை மாநகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை மேயர் பிரியா கடந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கி வைத்தார். இன்று வரை 46,122 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மணலி, ஆலந்தூர், மாதவரம் மண்டலங்களில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு பெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு Worldwide Veterinary Services (WVS) என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1,80,000 தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டம் 1960ன் கீழ் உருவாக்கப்பட்ட நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023க்குட்பட்டு, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தற்போது புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகிறது
கடந்த 2024ஆம் ஆண்டு 14,678 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பு 2025ஆம் ஆண்டு 07.08.2025 வரை 9,302 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும், அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மேயர் அவர்களால் (ஆகஸ்ட் 09ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
தலா 10 குழுக்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவும் தோராயமாக நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாளொன்றிற்கு தோராயமாக 3000 தெருநாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.
மண்டலங்கள் மற்றும் வார்டு வாரியாக தெருநாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, நாய் பிடிக்கும் பணியாளர்கள் வலைகளை கொண்டு நாய்களை பிடித்த பின்னர் கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும். பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் பூசி அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.