சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப்பணியாளர்கள் இரவில் கைது
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப்பணியாளர்கள் இரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம், தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து 13-வது நாளாக போராட்டம் நடத்திவருந்தனர்.
இந்தநிலையில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு நடைபெறும் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர், அருகில் மருத்துவானை உள்ளது என்ற தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுவோரை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, இதனை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, தூய்மைபணியாளர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் தொடரும் என தூய்மைப்பணியாளர்கள் அறிவித்தனர்.
இந்தநிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களை கைது செய்தனர். போராட்டம் செய்த தூய்மைப்பணியாளர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள் என 900 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் திருவான்மியூர், சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி சமுதாயக்கூடங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது தூய்மைப் பணியாளர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர். கஸ்தூரி(47), ஷாலினி(33), பானு(33), மங்கம்மா(54) ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.