சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தினந்தோறும் வரலாறு காணாத உச்சத்தை கண்டு வந்த தங்கம் விலையானது, உச்சபட்சமாக, கடந்த 17ம்தேதி பவுனுக்கு ரூ.98 ஆயிரத்தை நெருங்கி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் அடுத்த ஒருசில நாட்களுக்குள் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நகை பிரியர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக, தீபாவளி நாட்களிலிருந்து படிப்படியாக தங்கம் விலை குறைந்து வந்தது.
கடந்த 19ம்தேதி முதல் தங்கம் விலையில் தொடர் சரிவு இருந்து வந்தது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9 ஆயிரம் வரை குறைந்திருந்தது. இருப்பினும், இடையிடையே அதிகரித்தும் வருகிறது. தங்கம் விலை 27ம்தேதி காலை தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.150 குறைந்து, ரூ.11,300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் ரூ.225 சரிந்து, ஒரு கிராம் ரூ.11,075க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.90,400க்கு விற்பனையானது. மாலையில் மேலும் ரூ.1,899 சரிந்து, ஒரு பவுன் ரூ.88,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி ஒரே நாளில் ரூ.3 ஆயிரத்துக்கும் அதிகமாக குறைந்த நிலையில், நேற்று காலை பவுனுக்கு மீண்டும் ரூ. 1,080 அதிகரித்து ஒரு பவுன் ரூ.89,680க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து ரூ.11,210க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680க்கும் விற்பனையானது. மாலையில் வர்த்தகம் நிறைவு பெறும்போது, தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி, காலையில் ரூ.1,080, மாலையில் ரூ.920ம் உயர்ந்து, ஒரேநாளில் ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.90,600க்கும், கிராமுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.11,325க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பவுன் மீண்டும் ரூ.90ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது. ஒரே நாளில் காலை, மாலை என இருமுறை உயர்ந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.2000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,600 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து கிராமுக்கு ரூ.11,300க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கு விற்கப்படுகிறது.