சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள்: சென்னை மாநகராட்சி
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள். நாளை முதல் வீடு வீடாக ஆய்வு செய்து உரிமம் பெறதா செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ,5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது.
சென்னையில், செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரம், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக, நாய்க்கு முறையாக தடுப்பூசி, ஓட்டுண்ணி நீக்காதாதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளர்ப்பு நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. மேலும், நாய்களை வளர்க்க முடியாமல் பலர், அவற்றை சாலையில் திரிய விடுவதும் தொடர்கிறது.
இவற்றை தவிர்க்க, அனைத்து செல்லப் பிராணிகளையும் பதிவு செய்வதுகட்டாயம் என, மாநகராட்சி தெரிவித்தது. அவ்வாறு பதிவு உரிமம் பெறும் நாய்களுக்கு அக்., 8ம் தேதி முதல், 'மைக்ரோ சிப்' பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக மாநகராட்சி இனக்கட்டுப்பாட்டு மையங்கள், கால்நடை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முகாம் இன்றுடன் முடியும் நிலையில், நாளை முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இணையதளத்தில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், 55,319 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 43,204 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்படாமல் உள்ளன. உரிமம் பெற இன்று கடைசி நாள் என்பதால், அதிகம் பேர் பதிவு உரிமம் பெற வரக்கூடும்
நாளை முதல் வீடு வீடாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறதா, அதற்கான உரிமம் பெறப்பட்டுளதா என ஆய்வு செய்யப்படும். அவ்வாறு உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், உரிமம் பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.