முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த CHENNAI ONE மொபைல் செயலி :ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம்
சென்னை :முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலி பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலியை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த செயலி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்களை ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணச்சீட்டின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சென்னை ஒன்று செயலி’ பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம். முதல்வர் நேற்று தொடங்கி வைத்தாலும் பேருந்து, ரயில், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தில் வருகிற 1ம் தேதி முதல் பொதுமக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலி பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செயலியை அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ள பொது மக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.