சென்னை ஆம்னி பஸ்சில் 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 2பேர் கைது
சங்ககிரி: சங்ககிரி டோல்கேட்டில், ஆம்னி பேருந்தில் மூன்றரை கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவையில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் டோல்கேட் அருகே பயணிகள் டீ அருந்துவதற்காக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி டீ சாப்பிட சென்றுள்ளனர். அப்போது, பேருந்தில் பயணம் செய்த சங்கர் என்பவர் தான் பையில் வைத்திருந்த மூன்றரை கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை இருக்கை அருகே வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் இருந்த பை மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க, 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு, இன்று அதிகாலை இந்தக் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன்(57) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட மூன்றரை கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளி மெரிஜா(28) என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(57), அவரது நண்பர் மெரிஜா மூலம் நகையை எடுத்து செல்லும் சங்கரை நோட்டமிட்டுள்ளார். பிறகு, சங்கர் ஏறி செல்லும் பஸ்சில் மெரிஜாவை(28)ஏற்றியுள்ள பாலசுப்ரமணியன் சங்கரை பின் தொடர்ந்து செல்லுமாறு மெரிஜாவிடம் தெரிவித்துள்ளார். பஸ் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட்டில் நின்ற போது, பாலசுப்ரமணியன் மெரிஜாவுக்கு நகையை கொள்ளையடிக்க செல்போன் மூலம் சிக்னல் கொடுத்துள்ளார். உடனே, மெரிஜா, சங்கர் தனது இருக்கை அருகே வைத்திருந்த தங்க நகை பையை கொள்ளையடித்து சென்றுள்ளார். அங்கு டோல்கேட்டில் தப்பித்துச் செல்வதற்கு பாலசுப்ரமணியன் பைக்கில் தயாராக நின்றுள்ளார். இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளது, விசாரணையில் தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.