சென்னையில் "எதிர்கால மருத்துவம் 2.0" பன்னாட்டு மருத்துவ மாநாட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!!
சென்னை : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (16.10.2025) சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சார்பில் மருத்துவத்தின் எதிர்காலம் எனும் தலைப்பில் (Future of Medicine) "எதிர்கால மருத்துவம் 2.0" இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாடு தொடங்கி வைத்து, மின் இதழை வெளியிட்டு, துணைவேந்தர் மரு.நாராயணசாமி அவர்கள் இயற்றிய "நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு" எனும் நூலினை வெளியிட்டு. மாநாட்டு மலர் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு வெளியிட்டு விழா பேரூரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-
19.01.2024 முதல் 21.01,2024 வரை 3 நாட்கள் "மருத்துவத்தின் எதிர்காலம்" (Future of Medicine) எனும் தலைப்பில் முதலாவது பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கத்தார், ஆஸ்திரிலேயா மற்றும் கனடா ஆகிய 7 நாடுகளில் இருந்தும், இந்தியா முழுவதும் இருந்தும் மொத்தம் 210 மருத்துவ நிபுனர்கள் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் போன்ற 27 சிறப்பு மருத்துவ அமர்வுகள், 5 குழு விவாதங்கள். 50 இணை அமர்வுகளுடன் 11,000 மாணவர்கள் கலந்து கொண்டு, 600 அறிவியல் ஆராய்ச்சி சுருக்கங்கள் வெளியிடப்பட்டது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சர்வதேச மருத்துவ மாநாடு -எதிர்கால மருத்துவம் 2.0, 16.10.2025 முதல் 18.10.2025 வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மைய வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இம்மாநாட்டில் சுமார் 9,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவம், பல் மருத்துவம். ஆயுஷ், செவிலியர், மருந்தியல், மறுவாழ்வு அறிவியல், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள் சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ மாணவியர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் 207க்கும் மேற்பட்ட சர்வதேச. தேசிய மற்றும் மற்ற மாநில புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கத்தார். ஐக்கிய அரபு நாடுகள், புரூனே மற்றும் இலங்கை போன்ற 9 நாடுகளை சேர்ந்த 38 சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் புதுதில்லி, மணிப்பூர், சண்டிகர், புதுச்சேரி. தமிழ்நாடு, சென்னை, ஹைதராபாத், கர்நாடகா, கேரளா, மேகாலயா, அசாம் போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த 169 மருத்துவ வல்லூநர்கள் கலந்து கொண்டு எதிர்கால மருத்துவம் குறித்து பேச உள்ளனர். இம்மாநாட்டில் 14 இணைய வழியாகவும், 12 குழு விவாதங்களும் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் மருத்துவம் சார்ந்த 384 தேர்ந்தெடுக்கப்பட்ட பதாகை விளக்கக்காட்சிகளும், 244 வாய்மொழி படைப்புகளும் இடம் பெறவுள்ளது. இம்மாநாட்டில் மருத்துவம். பல் மருத்துவம். ஆயுஷ், செவிலியர், மருந்தகம், மறுவாழ்வு அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட 150 சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பன்னாட்டு மருத்துவ வல்லூநர்களால் நடத்தப்படுகின்ற 18 திறன்மேம்பாட்டு செயல்முறைகளும், தேசிய மருத்துவ வல்லூநர்களால் நடத்தப்படுகின்ற 14 திறன்மேம்பாட்டு செயல்முறைகளும், Robatic அறுவை சிகிச்சை முறைகளை உள்ளடக்கிய மொத்தம் 32 திறன்மேம்பாட்டு செயல்முறைகளும் மற்றும் சுமார் 8 இணை அமர்வுகளும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் VIT (நிகர்நிலை பல்கலைகழகமும்) இணைந்து மருத்துவ பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ உயிரியக்கவியல் பயிலரங்கு நடத்த உள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த ஆசிரியர்களால் பல்வேறு சிறப்புகளில் மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில் சுமார் 787 அறிவியல் ஆராய்ச்சி சுருக்கங்கள் இடம் பெற உள்ளது. இம்மாநாட்டின் முக்கிய கருப்பொருளான அவசர மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் சிகிச்சை மற்றும் நாள்பட்ட நோய்கள் குறித்தும். மருத்துவ ஆராய்ச்சி செய்முறை விளக்க கருத்தரங்கள். விரிவாக விவாதங்களும் மற்றும் செயல்முறை விளக்கங்களும் இந்த மாநாட்டில் இடம் பெறும் என்று மருத்துவம் அவர்கள் விழா மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பேரூரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் மரு.நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மரு.பார்த்தசாரதி, பன்னாட்டு மருத்துவ பேராசிரியர்கள் மரு.ரெபேக்கா மில்லர், மரு.கபிலன் தர்மராஜன், மரு.நாகலிங்கம் வர்ணகுலேந்தரன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.