சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு ஏர்-பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் :ஒன்றிய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை: சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரிய அளவிலான ஏர்-பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ATR விமானங்கள் முனைய கட்டடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் நிறுத்தப்படுவதாகவும். இதனால் பயணிகள் அந்த விமானத்துக்கு செல்ல பேருந்துகள் மூலம் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியதாகவும் தெரிவித்தார். இந்த பேருந்து பயணம் மதுரைக்கு செல்லும் நேரத்தைவிட கூடுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த பேருந்துகளில் குறைவான இருக்கைகள் இருப்பதால், குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் பலமணி நேரம் நின்றபடியே பயணம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்க்கிங் கட்டணங்களை குறைப்பதற்காகவே, விமானங்கள் தொலை தூரத்தில் நிறுத்தப்படுவதாகவும். இதனால் பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே விமானங்களுக்கு செல்லவதற்கான பேருந்து பயணத்தை தவிர்க்க, மதுரைக்கான ATR விமானங்களை முனையத்திற்கு அருகிலேயே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இடைக்கால ஏற்பாடாக, விமானங்களுக்கு செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சிறிய ரக ATR விமானங்களுக்கு பதிலாக பெரிய அளவிலான ஏர் பஸ் ரக விமானங்களை இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.