சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 2 மகன்கள், மனைவியை கொன்று கணவர் தற்கொலை..!!
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 2 மகன்கள், மனைவியை கொன்று கணவர் தற்கொலை சமத்துவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் 56 வயதான சிரஞ்சீவி தாமோதர குப்தா என்பவர். அவரது மனைவி ரேவதி மற்றும் 15 வயதான மகன் ரிதிவிக் அஸ்வத் மற்றும் 11 வயது மகன் ஆகிய 4 பேர் வசித்து வந்துள்ளனர்.
சிரஞ்சீவி சென்னை மவுண்ட் ரோட் பகுதியில் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலதிபரான இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் கடன் தொல்லையால் குடும்பத்தோடு நேற்று இரவு உயிரிழந்துள்ளார். குறிப்பாக அவர் தனது இரண்டு மகன்களின் முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூலம் முகத்தை மூடி கொன்றுள்ளார். அதே போல் அவரது மனைவியை கொன்றுவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
எங்களுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் கைப்பட கடிதம் எழுதிவிட்டு அவரும், அவரது மனைவியும் கையெழுத்து போட்டுவிட்டு அவரது சகோதரர்கள் செல்போன் எண்ணையையும் தகவல் தெரிவிப்பதற்காக கடிதத்தில் எழுதி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த நீலாங்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.