“உத்தரவுகள் பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா?” - சென்னை ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி
சென்னை :சமூக வலைதளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் நீதிமன்றம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி செந்தில்குமாரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி செந்தில் குமார், "சமூக வலைதளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன."இவ்வாறு தெரிவித்தார்.