சென்னை உயர் நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி..!!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 15வயது சிறுமி மனுஸ்ரீ தாய், மற்றும் பாட்டியுடன் அந்தமானில் வசித்து வருகிறார். மனுஸ்ரீயின் தாய், தந்தை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே அந்தமானில் உள்ள சிறுமி தன்னுடன் வர வேண்டும் என கூறி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி சிறுமியிடம் தந்தை, தாய் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு அந்த சிறுமி இருவரிடமும் செல்ல மறுத்துவிட்டது.
இந்த நிலையில், அரசு காப்பகத்திற்கு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்திருந்தனர். உத்தரவு நகல் கிடைத்த பிறகு சிறுமி சம்மந்தப்பட்ட அரசு காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும். அரசு காப்பகத்திற்கு செல்லாமல் இந்த சிறுமி வேறு ஒரு காப்பகத்திற்கு செல்வதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தீர்ப்புக்காக காத்திருந்த சிறுமி திடீரென முதல் மாடியிலிருந்து வேகமாக குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து கீழே விழுந்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த ஊழியர்கள் தகவலை தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது தந்தை நீலாங்கரையில் வசிப்பதால் நீலாங்கரை போலீசார் அந்தமானிலிருந்த சிறுமியை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.