சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு குளங்கள் அமைக்கலாம்!!
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கிளப் மைதானம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனியாருக்கு குத்தைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னரும் தொடர்ந்த நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு வாடகை பாக்கி வைத்திருந்தது. இதை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 160 ஏக்கர் நிலத்துக்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தும்படி ரேஸ் கிளப்பிற்கு உத்தரவிட்டிருந்தது.
வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கிளப் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை அரசு கையகப்படுத்தி பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ரேஸ் கிளப் குத்தகையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க 4 குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்து வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி இடைக்கால உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.