சென்னை கோட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மின்சார ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் இருந்து ரூ.8 கோடி அபராதம் வசூல்!!
சென்னை : சென்னை கோட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.8 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்களில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பலர் டிக்கெட் எடுக்காமல், பயணம் செய்வதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனைகளில் சென்னை கோட்டத்தில், நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்காமல், பயணம் செய்த 30,000த்திற்கும் மேற்பட்டோர் பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடம் ரூ.8.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருந்த இடத்தில் இருந்தே டிக்கெட் எடுப்பதற்காக இணையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் மீறி டிக்கெட் இன்றி பயணிப்போருக்கு அபராதம் மற்றும் சிறை உள்ளிட்ட தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.