சென்னையில் இருந்து 296 பேருடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து 296 பேருடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 3.50 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டது. இந்த போயிங் ரக பெரிய விமானத்தில், 284 பயணிகள் 12 விமான ஊழியர்கள் உட்பட 296 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடியபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஊழியர்கள், இழுவை வாகனங்களுடன் வந்து, விமானத்தை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தினர். பின்னர் விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தை பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்த்து வருகின்றனர். விமானம் முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, நாளை அதிகாலை 1.30 மணிக்கு துபாய்க்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானி, உடனடியாக இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால் 296 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.