சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
சோழிங்கநல்லூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், தடையை மீறி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் கடைகளில் விற்கப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆகியோர் ஆங்காங்கே சோதனை நடத்தி அவ்வப்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் ரூ.28 லட்சம் மதிப்பிலான 3 டன் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சென்னை போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 4 ஆயிரம் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, பெருங்குடி குப்பை கிடங்கில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ் செல்வன் முன்னிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நேற்று அழிக்கப்பட்டது. மேலும், போலீசார் முன்னிலையில் 4 ஆயிரம் மதுபாட்டில்களும் அழிக்கப்பட்டது.