சென்னை சுங்கத்துறை மீது பரபரப்பு லஞ்சக் குற்றச்சாட்டு: இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வின்ட்ராக் அறிவிப்பு
சென்னை: சென்னை சுங்கத்துறையினர் லஞ்சம் கேட்டு தொல்லை தருவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வின்ட்ராக் என்ற நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. வின்ட்ராக் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் சென்னை சுங்கத்துறை மீது பரபரப்பு லஞ்ச குற்றசாட்டை தெரிவித்ததுடன் இந்தியாவைவிட்டு வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளது. வின்ட்ராக் நிறுவனம் தமிழ்நாட்டில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சீனா மற்றும் தாய்லாந்தில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், லஞ்சம் தர மறுத்ததால் இறக்குமதி செய்த பொருட்களை 45 நாட்களாக சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்திருப்பதாக இந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை விடுவிக்க சுங்கத்துறையினர் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக வின்ட்ராக் நிறுவனர் பிரவீன் கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி சார்பில் லஞ்சம் கேட்கும் தரகரிடம் அவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வின்ட்ராக் நிறுவனர் பிரவீன் கணேசன் சுங்கத்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு தமது எக்ஸ் தளத்தில் லஞ்ச குற்றசாட்டை பதிவிட்டார். அதன் பிறகு சுங்கத்துறை அதிகாரிகள் குறிவைத்து தன்னிடம் பிரச்சனை செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சுங்கத்துறையினரின் பழிவாங்கும் நடவடிக்கையால் தங்கள் வணிகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திவிட்டு இந்தியாவைவிட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.
இந்த லஞ்ச குற்றசாட்டு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அரசு நிர்வாகத்தில் லஞ்சம் புரையேறிப்போய் இருப்பதை சுங்கத்துறையினரியின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தி உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பல நிறுவனங்கள் தொழில் செய்வதற்காக லஞ்சத்தை சகித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் பொய்யான குற்றசாட்டுகளை பிரவீன் கணேசன் கூறி வருவதாக புகாரை சுங்கத்துறை மறுத்துள்ளது. இதனிடையே வின்ட்ராக் லஞ்சப்புகார் குறித்து ஞாயமான வெளிப்படையான விசாரணை கொள்ள ஒன்றிய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை மூத்த அதிகாரிகள் மூலம் வின்ட்ராக் நிறுவனத்தின் புகார் குறித்து விசாரிக்கப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.