சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு!!
சென்னை: தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய உழைப்போர் உரிமை இயக்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதி கே.சுரேந்தர் தீர்ப்பில் கூறியதாவது; தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்பதால் தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை. தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் . தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.