சென்னையில் முதல் இரும்பு மேம்பாலம்! : ரூ. 164 கோடியில் தியாகராய நகரில் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.9.2025) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 164.92 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு, மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நினைவாக "ஜெ. அன்பழகன் மேம்பாலம்" என்று பெயர் சூட்டப்பட்டு திறந்து வைத்தார்.
பெருகிவரும் போக்குவரத்தினைக் கருத்தில் கொண்டு மக்கள் எளிதாகப் பயணம் செய்திடும் வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 300.16 கோடி ரூபாய் செலவில் 13 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசினால் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உயரிய தொழில்நுட்பத்துடன் தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் "ஜெ. அன்பழகன் மேம்பாலம்" ஆகும்.
சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை பர்கிட் சாலை மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு. தெற்கு உஸ்மான் சாலை தென்மேற்கு போக் சாலை -நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் இருவழிப்பாதையாக ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் 10000 பாலத்திலிருந்து தியாகராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்பெறுவார்கள். சுமார் சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் சிறப்பிக்கின்றன. அழகிய ஓவியங்களாக உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.