சென்னை ஆலந்தூரில் பிரபல உணவக கட்டிடத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்ட் நிலம் மீட்பு
சென்னை: சென்னை ஆலந்தூரில் உள்ள பிரபல ஓட்டல் குத்தகை இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை சர்வே எண் 146/2 ல் 15 கிரவுண்ட் அரசு நிலத்தில் குத்தகை காலம் முடிந்தும் அந்த இடத்தில் ஓட்டல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
பிரபல உணவகம் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்னேகா உத்தரவின்பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், செந்தில், நடராஜன், வருவாய்துறை அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் அதிகாலையில் வந்து உணவகத்தில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி, முகப்பு கதவினை பூட்டி சீல்வைத்தனர்.
மேலும் அந்த இடத்திற்கு அருகே ஜி.எஸ்.டி. சாலை, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளதால் இந்த 15 கிரவுண்ட் நிலம் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.