சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று முன்தினம் வந்த ஒரு மர்ம இ-மெயில் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, விமான நிலைய இயக்குனருக்கு அவசரமாக தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக, பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் கூடுதலாகவும், பயணிகள் விமானங்களில் ஏறும் இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதோடு பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடங்களில் அனைத்து பயணிகளும் தங்களுடைய காலணிகளை கழற்றி, ஸ்கேன் பரிசோதனைக்காக வைக்கும்படி வலியுறுத்தப்பட்டது. மேலும் பயணிகள் அணிந்திருக்கும் பெல்ட், குளிருக்காக அணிந்திருக்கும் ஜாக்கெட் போன்றவைகளையும் கழற்றி ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். ஆனால் தீவிர சோதனைக்கு பின்பு, வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்றும் இது வழக்கமாக வரும் புரளி என்றும் தெரிய வந்தது.
ஆனால், இதுபோன்ற பரிசோதனைகள் காரணமாக, சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு நேற்று புறப்பட்டு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஹாங்காங், பிராங்க்பர்ட், குவைத், துபாய், சார்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதை தொடர்ந்து, பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் காரணமாக, விமானங்கள் தாமதம் ஆவதை தவிர்ப்பதற்காக, பாதுகாப்பு சோதனைகளுக்கு வந்து நிற்கும் பயணிகள் தங்களுடைய காலணிகள், பெல்ட், குளிருக்காக அணிந்திருக்கும் ஜாக்கெட் போன்றவைகளை முன்னதாகவே கழற்றி, டிரேவில் வைத்து ஸ்கேன் பரிசோதனைக்கு தயாராகும்படி, இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.