தொடர் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: 10க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பாடு தாமதம்; சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பல்வேறு விமானங்களில் வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்பயணிகளுக்கு வழக்கமான பலகட்ட பாதுகாப்பு சோதனைகள் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் இருந்து ஜெர்மனி தலைநகர் பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்சா ஏர்லைன்ஸ், துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கோலாலம்பூர் செல்லும் ஏர்ஏசியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தோகா செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ், தாய்லாந்து செல்லும் தாய் ஏர்லைன்ஸ், சார்ஜா மற்றும் அபுதாபி செல்லும் ஏர்அரேபியன் ஏர்லைன்ஸ், அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ், மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் சுமார் அரைமணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
இதுபோன்ற பலகட்ட பாதுகாப்பு சோதனைகளால் வெளிநாடு செல்லும் பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தில் ஏறமுடியாமலும், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமலும் பெரிதும் அவதிப்பட்டனர். இப்பாதுகாப்பு சோதனைகளில் பயிற்சி பெற்ற சிஐஎஸ்எப் வீரர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் புரிந்து பேசும் வீரர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.