சென்னை விமானநிலையத்தில் ரூ.35 கோடி கொகைன் போதைப்பொருள் கடத்தி வந்த நடிகர் கைது: வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை: சென்னை விமானநிலையத்தில் கடந்த ஞாயிறு இரவு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கொகைன் போதைபொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட அசாம் மாநில வாலிபர், இந்தி திரைப்பட துணை நடிகர் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் கடந்த ஞாயிறு இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் அதிகளவு போதைபொருளை ஒருவர் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியான சுமார் 35 வயது மதிக்கத்தக்க அசாம் மாநில வாலிபரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கம்போடியாவுக்கு சுற்றுலா சென்று, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருப்பது தெரியவந்தது. அவரது உடைமையை சோதனை செய்ததில், ரூ.35 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கொகைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து, சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மும்பை, டெல்லியை சேர்ந்த 2 பேருக்காக கொகைன் போதைபொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போதைபொருள் கடத்தலில் தொடர்புடைய 2 பேர் குறித்து டெல்லி, மும்பை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த 2 பேரை பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போதைபொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர், இந்தி திரைப்பட துணை நடிகர் என்றும், அவர் ஏற்கெனவே ஸ்டுடன்ட் ஆப் இயர் 2 என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த விஷால் பிரமா என்றும் வடமாநில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது உறுதிப்படுத்த மறுப்பு தெரிவித்து மவுனம் காத்து வருகின்றனர். மேலும், கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு ரூ.35 கோடி கோகைன் போதைபொருள் கடத்தி வந்த வடமாநில வாலிபரை கைது செய்து, கோகைனை பறிமுதல் செய்துள்ளோம்.
இதுதொடர்பாக, மேலும் 2 பேரை வடமாநிலங்களில் தேடி வருகிறோம். தற்போது கைது செய்யப்பட்டவர் திரைப்பட துணை நடிகரா என்ற விவரம் எதுவும் எங்களுக்கு தெரியாது. அதேபோல் சுங்கத்துறையால் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் பெயர்களை வெளியிடுவது வழக்கம் இல்லை. எனவே, இப்போது போதைபொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டவரின் பெயரையும் நாங்கள் அதிகாரபூர்வமாக வெளியிட முடியாது என்று தெரிவிக்கின்றனர்.