சென்னையில் 10வது நாளாக 36 இண்டிகோ விமானம் ரத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 10வது நாளாக 36 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஆட்கள் பற்றாக்குறை, விமானிகள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால் நாடு முழுவதும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அதேபோல், சென்னை விமான நிலையத்திலும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தொடர்ந்து ரத்து, தாமதமாக இயக்கம் போன்ற காரணங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த சூழ்நிலையில் நேற்று 10வது நாளாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 36 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதில், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், பாட்னா, புவனேஸ்வர், கொச்சி, கொல்கத்தா, கோவை உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், சிங்கப்பூர், பினாங்கு ஆகிய சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், சென்னைக்கு வரும் விமானங்கள் சிங்கப்பூர், பினாங்கு, ஜெய்ப்பூர், பெங்களூரு, கோவை, டெல்லி, மும்பை உள்ளிட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் 70 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று விமானங்களின் ரத்து எண்ணிக்கை 36 ஆக குறைந்ததால் பயணிகள் ஆறுதல் அடைந்தனர்.