செங்கம் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை
செங்கம்: குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து தாயும் தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கவுரி(30). இவர்களது மகன்கள் கிஷோர்(5) அரசு பள்ளியில் 1ம் வகுப்பும், தேவேஷ்(4) அங்கன்வாடி மையத்திலும் படித்து வந்தனர். செலவுக்கு பணம் தராததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலையிலும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கவுரி மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
நீண்ட நேரமாகியும் திரும்பாததால் உறவினர்கள் கவுரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அந்த செல்போனை தொழிலாளி ஒருவர் எடுத்து, விவசாய கிணற்றின் மேல் கிடந்ததாக தெரிவித்துள்ளார். தகவலறிந்து செங்கம் போலீசார், தீயணைப்பு துறையினருடன் சென்று கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கிணற்றுக்குள் கிடந்த கிஷோர், தேவேஷ், கவுரி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறில் மனமுடைந்த கவுரி, 2 மகன்களையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.