செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் ரூ.21.85 கோடியில் மாநில பயிற்சி கழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் ரூ.21.85 கோடியில் கட்டப்பட உள்ள மாநில பயிற்சிக் கழகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், காலவாக்கத்தில் ரூ.21.85 கோடியில் கட்டப்படவுள்ள மாநில பயிற்சிக் கழகத்திற்கு தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், காவல்துறை சார்பில் ரூ.97.65கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள் 2 காவல் நிலையங்கள், 6 காவல் துறைக் கட்டடங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ரூ.1 கோடியே 4 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகம் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.