செஞ்சி அருகே ரூ.20 லட்சத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சோ.குப்பம் பகுதியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஒன்றாக நந்தன் கால்வாய் மூலம் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீரை கொண்டு வருவதற்கான திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டமானது 350 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சலாற்றின் குறுக்கே உள்ள கீரனூர் அணைக்கட்டில் இடது புறம் உள்ள தலைப்பு மதகில் இருந்து ஆரம்பமாகிறது.
நந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைவில் ஜீரோ கிலோமீட்டர் முதல் 12.400 கிலோமீட்டர் வரையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொலைவில் 12.400 கிலோமீட்டர் முதல் 37.800 கிலோ மீட்டர் வரையிலும் அமைந்துள்ளது. இத்தொலைவுக்கு பிறகு விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் வட்டங்களில் சங்கிலி தொடர் ஏரி மூலம் ஏரிகளுக்கு நீர் வழங்கப்படுகிறது.
நந்தன் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் 14 ஏரிகள் மூலம் 1,566.20 ஏக்கரும், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் 10 ஏரிகள் மூலம் 1,650.20 ஏக்கரும், விக்கிரவாண்டி வட்டத்தில் 9 ஏரிகள் மூலம் 2,599.12 ஏக்கரும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 ஏரிகள் மூலம் 792.12 ஏக்கர் என மொத்தம் 36 ஏரிகள் மூலம் 6,597.66 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் தாக்கத்தில் நந்தன் கால்வாய் கரையோர பகுதிகள் சேதமடைந்தது. இதனை சீர் செய்திட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் காரணமாக நிரந்தரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக 75 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாகவும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
இப்பணிக்கு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் ரூ.19 லட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் 20 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணியில் எக்ஸ்ட்ரோனா இன்டர்நேஷனல், என்டிஎஸ்ஓ, நம்மால் முடியும், எம்.என்.காயத்ரி சார் டிஸ் ஆகிய தன்னார்வ நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்கிறது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் நிலை உருவாகும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், உதவி செயற்பொறியாளர் சத்யா, செஞ்சி வட்டாட்சியர் துரைச்செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.