சமையலருக்கு வன்கொடுமை 6 பேருக்கு 2 ஆண்டு சிறை: திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பூர்: அவிநாசி வட்டம் சேவூர் அருகே குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாள் (49). அருந்ததியின சமுதாயத்தை சேர்ந்த இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரம் ஒச்சாம்பாளையம் கிராமத்தில் அரசு சமையலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2018 ஜூலை முதல் சொந்த ஊரான திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அங்கு ஒரு தரப்பினர் அவர் சமையல் செய்ய விடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்தினர். சாதியின் பெயரால் அவதூறாக பேசி இழிவுபடுத்தினர். சமையல் செய்ய விடாமல் சத்துணவு கூடத்தை பூட்டி வெளியில் அனுப்பினர். இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சேவூர் காவல் நிலையத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு பின் வட்டார வளர்ச்சி அலுவலர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டார். 4 பேர் உயிரிழந்தனர். மீதி 31 பேர் மீதான வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் நேற்று அளித்த தீர்ப்பில், 25 பேரை விடுதலை செய்தும், திருமலைக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (68), சக்திவேல் (49), சண்முகம் (47), வெள்ளியங்கிரி (58), துரைசாமி (64 ), சீதாலட்சுமி (45) ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். நீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்து உள்ளார்.