செக்மேட் செஸ் போட்டி: நகமுராவிடம் வீழ்ந்து நடையை கட்டிய குகேஷ்
எர்லிங்டன்: அமெரிக்காவில் நடந்த செக்மேட் செஸ் கண்காட்சிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷை, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அமெரிக்காவின் எர்லிங்டன் நகரில் செக்மேட் செஸ் கண்காட்சிப் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் எதிர் வீரரை, செக்மேட் செய்து வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் ஆடிய 5 இந்திய வீரர்களும் அமெரிக்க வீரர்களால் செக்மேட் செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா இடையே நடந்த முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய நகமுரா அபார வெற்றி பெற்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ஜுன் எரிகேசியை, அமெரிக்காவின் பேபியானோ கரவுனா, திவ்யா தேஷ்முக்கை சர்வதேச மாஸ்டர் கரிஸா யிப் தோற்கடித்தனர்.
அதேபோல் இந்தியாவை சேர்ந்த சாகர் ஷா, அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் லெவி ரோஸ்மேனிடம் பரிதாப தோல்வியை தழுவினார். மேலும், மற்றொரு இந்திய வீரர் ஈதன் வாஸ் (14), அமெரிக்காவின் டேனி அடெவுமியிடம் தோற்றார். இந்தியாவின் 5 முன்னணி செஸ் வீரர்களும், அமெரிக்க வீரர்களால் வீழ்த்தப்பட்டதால், நேற்றைய முன்தினம் இந்திய செஸ் ஆர்வலர்களுக்கு சோகமான நாளாக அமைந்தது.