ஏமாளி பேச்சால் ஆடிப்போயிருக்கும் அல்வா ஊர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
பலரை அழைத்து, நீ தான் ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர், நகர செயலாளர் என நியமிச்சிருக்காங்களாம்.. ஆனால் அவர்கள் யாரும் செயல்படவில்லையாம்.. இந்நிலையில் கட்சியை மீட்டுவிடுவார் என்று தன்னால் இயன்றதை செய்து வந்தாங்களாம்.. ஆனால் பலாப்பழக்காரர் ஒன்றுமே செய்வதில்லையாம்.. அவரை நம்பி வந்ததற்கு நம்மளை நட்டாற்றில் விட்டு விட்டனரே என புலம்பி வருகின்றனராம்.. சேலத்துக்காரர் அணியினர் அழைத்தப்பவே போயிருந்தா நமக்கு பதவி இல்லாட்டியும் மரியாதையாவது கொடுத்து இருப்பாங்க..
இனி போனா நம்மல கிண்டல் பண்ண மாட்டாங்களா என புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலம்காரர் கொடுத்த ‘ஷாக்’ மலராத கட்சியை அடக்கி வாசிக்க வைச்சிருப்பது இலைக்கட்சியினக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கூட்டணி ஆட்சி... கூட்டணி ஆட்சி... என வார்த்தைக்கு வார்த்தை இலை கட்சியினரை சூடேற்றி வந்த மலராத தேசிய கட்சியினருக்கு முகத்தில் கரியை பூசி விட்டாரே சேலம்காரர்.. என்ன தான் இலை கட்சியை மிரட்டி பணிய வைத்து தலைநகருக்கு வரவழைத்து கூட்டணி அமைத்தாலும் இலை கட்சியினர் முழு மனதாக இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்வதாக இல்லை..
அதுவும் கூட்டணி அமைந்தது முதல் தேசிய கட்சியினர் வாய்க்கு வந்தபடியெல்லாம் இலை கட்சியினரை வசை பாடி வந்தாங்க.. கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என மனக் கோட்டை கட்டினாங்க.. இப்படி நடந்தால் எங்கே மகாராஷ்டிரா நிலை நமக்கும் வந்து விடுமோ என இலை கட்சியினரை அச்சம் ஆட்டிப்படைச்சது.. சேலம்காரரும் உடனே ரியாக்சன் காட்டாமல் மவுனம் காத்து வந்தார். ஆனால் மலராத தேசிய கட்சியினரின் பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், கோபத்தின் உச்சிக்கு போன சேலம்காரர் ‘ஆட்சியில் பங்கு தர நான் ஏமாளி அல்ல’ என மனதில் இருந்ததை போட்டு உடைச்சிட்டாரு..
இதனால் தேசிய கட்சியினர் ‘ஷாக்’ ஆகிப் போய் இருக்காங்களாம்.. குறிப்பாக மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ, இந்த கூட்டணி அமைய வேண்டும் என்று எத்தனை இடங்களில் ஆரூடம் பார்த்தோம்.. இப்போது இலை கட்சியின் தலைவர் போட்டு உடைத்து விட்டாரே என கவலை அடைந்துள்ளாராம்.. இருந்தாலும் சட்டசபை தேர்தல் வரைக்காவது கூட்டணியை பாதுகாத்தாக வேண்டும் என்பதற்காக அவர் இலை கட்சியை பற்றி எந்த விமர்சனமும் இல்லாமல் அடக்கி வாசிக்கிறாராம்..
ஏற்கனவே இந்த கூட்டணி தேர்தல் வரைக்கும் நீடிக்குமா என அரசியல் கட்சியினர் விவாதித்து வரும் நிலையில் சேலம்காரரின் பேச்சு அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்பதால் இலைகட்சியினர் புது உற்சாகத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் ‘பகுதி’ நிர்வாகி போடும் ஆட்டம் தாங்க முடியலையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் சீட் பிடிப்பதில் ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்காங்களாம்.. இந்த மாங்கனி ஊரில் தெற்கு தொகுதி ஒன்று இருக்கு.. கடந்த 25 ஆண்டுகளாக இலைக்கட்சி தான் அங்கு வெற்றி பெற்றிருக்காம்.. மம்மி காலத்தில் யாருக்கு சீட் என்பதே கடைசி நேரத்தில்தான் தெரியுமாம்.. அதற்கு முன்பு யாராவது வாயை திறந்தால் கடைசிவரை வாய்ப்பே கிடைக்காதாம்.. ஆனால் தற்போது இலைக்கட்சி தலைவரிடம் கட்சி இருக்கும் நிலையில், எல்லோரும் தனக்கு தான் இம்முறை சீட் கிடைக்கும் என ஊர் முழுவதும் சொல்லிக்கிட்டிருக்காங்களாம்..
இந்த பட்டியலில் 10க்கும் மேற்பட்டோர் கோடிகளை தூக்கிட்டு சுற்றும் நிலையில், ஒரே ஒரு பகுதி செயலாளர் மட்டும், சின்னவர் எனக்கு தான் சீட் என சொல்லி இருக்காருன்னு எல்லோரையும் மிரள வைக்கிறாராம்.. யார் அந்த சின்னவர் என்றால், இலைக்கட்சி தலைவரின் நிழலான மாவட்ட செயலாளர் தான் என்றும் சொல்கிறாராம்.. வாரத்திற்கு மூன்று நாள் அதிகாலையிலேயே நிழலானவரின் வீட்டுக்கு சென்று விடுவாராம் அந்த பட்டி பகுதி செயலாளர்..
ஒவ்வொரு முறையும் நிழலானவரின் வாயில் இருந்து தெற்கு தொகுதி உனக்கு தான் என சொல்லும் வரை அங்கேயே இருப்பாராம்.. அதன்பிறகு தான் ஊருக்கு புறப்பட்டு வருவாருன்னு அவரது அடிபொடிகள் சொல்றாங்க.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ மாநகர் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என நிழலானவருக்கு உத்தரவு போட்டிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதற்கிடையில் மாநகர மகளிரணி நிர்வாகிகள், புறநகர் மாவட்ட இன்னொரு நிர்வாகியை சந்தித்து மனக்குமுறலை கொட்டியிருக்காங்களாம்.. மகளிரணிக்கு எந்த மரியாதையும் இல்லாம போச்சுது..
பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டு போக அவரது வீட்டிற்கு போனால் உள்ளே விடுவது இல்லை. ஒரு பகுதி செயலாளரின் ஆட்டத்தினால் ஒட்டுமொத்த மகளிரணியும் கலங்கி போயிருக்குதுன்னு கண்ணீர் ததும்ப சொன்னாங்களாம்.. மிகவும் ஆர்வமாக கேட்டுக்கிட்ட அந்த நிர்வாகியோ, நிழலானவரையே தலையிட வேண்டாமுன்னு சொல்லியிருக்கும் நிலையில் நான் உள்ளே போவது என்பது குதிரைக்கொம்பு தான் என ஜகா வாங்கிட்டாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.