சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 2 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பரமசிவன்-பார்வதி ஆகியோருடன், பல்வேறு வாகனங்களில், சிங்கத்தின் மீது என்று விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விநாயகர் சிலைகளுக்கான பாகங்கள் தனித்தனியாக ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் பகுதிக்கு வரவழைக்கப்படுகின்றன. பின்னர் இங்கு அவற்றை நேர்த்தியாக பொருத்தி, சிலைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு முழு வடிவம் கொடுக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே இத்தொழில் நடைபெற்று வந்தது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேலான நாட்கள் உள்ள நிலையில் தற்போதே விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதால், கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குவியும் ஆர்டர்கள்
விநாயகர் சிலைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், மழைக்காலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்க முடியாது என்பதால், கோடை காலங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் காகித கூழ், கிழங்கு மாவு, ஆகியவற்றால் விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகிறது. இவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர்மாசுபாடு ஏற்படாது. இங்கு விற்பனைக்கு உள்ள சிலைகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாக்குழுவினர் வாங்கி செல்ல ஆர்டர் குவிந்து வருகின்றன என்று கூறினர்.
நவராத்திரி கொலு பொம்மைகள்
விநாயகர் சதுர்த்திக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிந்ததும் இவர்கள் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி துவங்கி அசத்தி வருவார்கள். பல்வேறு வடிவங்களில் அரை அடி முதல் ஐந்தடி வரை பொம்மைகள் தயாரிக்கின்றனர். இதன் மூலம் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
ரூ.3,500 முதல்...
பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ. 1,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர்.
அதேபோல், இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விலை ரூ.3,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் விநாயகர் சிலைகளின் வடிவமைப்பை பார்த்து ஆர்டர் கொடுத்து செல்கின்றனர்.