சதுரகிரி மலையில் கட்டுக்கடங்காத தீ: பக்தர்கள் செல்ல தடை
வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று முன்தினம் காலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் கருகி வருகின்றன.
Advertisement
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ கட்டுக்கடங்காமல் உள்ளது. தீயை அணைக்கும் பணி தொடர்கிறது. இந்நிலையில், ஆவணி மாத பிரதோஷ தினமான நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
Advertisement