சாட்ஜிபிடியிடம் எதையெல்லாம் பகிர கூடாது..? விளக்குகிறது ஏஐ
புதுடெல்லி: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைய உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, எக்ஸின் குரோக், கூகுளின் ஜெமினி உள்ளிட்ட பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் தற்போது சந்தையில் உள்ளன. இதில் சாட்ஜிபிடியே பயனர்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. எந்த ஒரு சந்தேகம் என்றாலும் அதன் மூலம் தெரிந்து கொள்வதை இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். தலைவலி என்றால்கூட ஏ.ஐ.யிடம் கேட்கும் நிலை ஏற்பட்டு விட்டது. காலை முதல் இரவு தூங்கும் வரையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு சாட்ஜிபிடியே பலருக்கும் கை கொடுக்கிறது. அலுவலகத்தில் சந்தேகம் என்றால்கூட அதை பயன்படுத்துகின்றனர்.
ஏஐ தளங்கள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு கட்டுப்பாடு இன்றி அனைத்து விவரங்களையும் கேட்டு பெறுவது தேவையற்ற குழப்பங்களுக்கும் சிக்கலுக்குமே வழிவக்கும் என அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கிரெடிட் கார்டு, வங்கி விவரங்கள், வீட்டு முகவரி, போன் நம்பர்கள், பாஸ்வேர்டுகள், மருத்துவ விவரங்கள், மருந்து சீட்டுக்கள், சட்ட பிரச்னைகள், வழக்கு விவரங்கள், தனிப்பட்ட குடும்ப / உறவு பிரச்னைகள், பணி மற்றும் வர்த்தக ரகசியங்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் ரகசிய தகவல்கள், சட்ட விரோத செயல்களுக்கான வழிமுறைகள், பிறரது தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவைகளை பகிர கூடாது என சாட்ஜிபிடியே கூறியுள்ளது. மேலும், பொதுவெளியில் பகிர தயங்கும் எந்த ஒரு விஷயத்தையும் பகிர வேண்டாம் என்று சாட்ஜிபிடியே கூறியிருக்கிறது. ஏனெனில் இதுபோன்ற தனிப்பட்ட தரவுகள் பிறருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பல சிக்கல்கள் எழக்கூடும் என்பதால் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.