தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 24ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா' என பெயரிடப்பட்டு இருக்கிறது.
மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல், தற்போது சென்னைக்கு 470 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை (28.10.2025) மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் புயல் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி. மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.