யுஎஸ் ஓபன் மகளிர் டென்னிஸ்; சா துரியம் சாகசம் சாம்பியன் சபலென் கா: போராடி தோல்வியை தழுவிய அமண்டா
நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா (27), அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை (24) அபாரமாக வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. அரை இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை வீழ்த்திய, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், சபலென்கா, அமண்டா இடையே, நேற்று இறுதிப் போட்டி நடந்தது. துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட சபலென்கா முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக கைப்பற்றினார். ஆனால், 2வது செட்டில் சுதாரித்து ஆடிய அமண்டா, சரிக்கு சமமாக சவால் எழுப்பியதால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீண்டது. இருப்பினும், சாதுரியமாக ஆடிய சபலென்கா, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் வசப்படுத்தி, 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம், யுஎஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை. தொடர்ந்து 2வது முறையாக சபலென்கா தட்டிச் சென்றார். சபலென்காவுக்கு, இது 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். மேலும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், அவர், 100வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன்கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் பரிதாபமாக தோல்வியை தழுவி வெளியேறிய சபலென்கா, அதை ஈடுகட்டும் வகையில், யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதியில் வென்றதை கொண்டாடும் வகையில், கையில் ஷாம்பெயின் மது பாட்டிலுடன் பத்திரிகையாளர்களை உற்சாகமாக சந்தித்து பேசினார்.