ரூ.1700 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா; பல்லாவரத்துக்கு நாளை வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரத்தில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை திறப்பு விழா நாளை காலை 9 மணியளவில் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் 25 ஆயிரம் ஏழை, எளியவர்களுக்கு ரூ.1700 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடக்கிறது. இருவிழாக்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். முதலில் தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு ஆலந்தூர் தொகுதி கண்டோன்மெண்ட் பழைய டிரங்க் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடலில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 25,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசுகிறார்.
விழாவில் கலந்துகொள்ள தாம்பரம் மற்றும் பல்லாவரத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு, பல்லாவரம் பான்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் ஆயிரக்கணக்கான திமுகவினர், பொதுமக்கள் அணி திரண்டு கோலாகலமான வரவேற்பு அளிக்க உள்ளனர். இதையடுத்து பல்லாவரத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு, கண்டோன்மெண்ட் பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் விழா நடைபெறும் இடம் வரை பொதுமக்கள், திமுகவினர் ஆர்ப்பரித்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இரு நிகழ்ச்சியிலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுகவினர் அலைகடலென திரண்டு வந்து எழுச்சியான முறையில் வரவேற்பு அளித்திடவேண்டும் என அழைக்கிறேன். லட்சிய உணர்வோடு திமுகவினர் அனைவரும் கரங்களில் திமுக கொடியேந்தி வர அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.