செல்போன் பார்ப்பதாக தாய் கண்டிப்பு: கைக்குழந்தையுடன் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை
நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அருகே சரல்விளையை சேர்ந்த அபுல்கலாம் ஆசாத், மகள் ஷர்மி (26)க்கும் நெட்டா பகுதியைச் சேர்ந்த காலித் (27) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹைரா என்ற 7 மாத பெண் குழந்தை உண்டு. காலித் தூத்துக்குடியில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு செல்வார்.
கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் ஷர்மி, மகளுடன் சரல்விளையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி செல்போனையே பார்த்துக் கொண்டு குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை ஷர்மியின் தாயார் சாரா கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு குழந்தை அழுது கொண்டிருந்த போது ஷர்மி செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை அவரது தாயார் கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாயாரிடம் கோபித்துக் கொண்டு நான் சாக போகிறேன் என கூறியவாறு குழந்தையை தூக்கிக் கொண்டு ஷர்மி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சியை பார்த்த போது, அங்குள்ள ஞாறகுழிவிளை குளம் நோக்கி சென்றது தெரிய வந்தது. குளத்தில் பார்த்த போது ஷர்மியும், குழந்தையும் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. தக்கலை போலீசார் வந்து சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.