செல்போன் கலாசாரம் அதிகரிப்பை தவிர்க்க அரசு பள்ளியில் தினமும் விளையாட்டு பயிற்சி
தஞ்சாவூர் : வீட்டு பாடங்களை முடித்தால் மட்டுமே விளையாட்டு பயிற்சி என்ற நூதன நிபந்தனை மூலம் அரசு பள்ளி ஒன்று மாணவ-மாணவிகளை கவர்ந்து வருகிறது. செல்போன் மோகத்தில் மூழ்கி தவிக்கும் இளம் தலைமுறையை மீட்கும் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.
அரசு பள்ளிகளில் படித்து சாதித்தவர்கள் ஏராளம். கல்வி மட்டுமல்ல விளையாட்டிலும் அரசு பள்ளி மாணவர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர். விளையாட்டு போட்டிகள் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.
செல்போன் கலாசாரம் இளைய தலைமுறையினரை ஆக்கிரமித்து உள்ளது. செல்போனில் பள்ளி மாணவ-மாணவிகள் பெருமளவில் மூழ்கி கிடக்கின்றனர். பள்ளியில் விளையாட்டு நேரங்களில் மட்டுமே நண்பர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர். மீண்டும் வீட்டுக்கு சென்றதும் செல்போனின் பிடியில் மாட்டிக்கொள்கின்றனர். இதனை தடுக்கவும், விளையாட்டு போட்டிகள் மீது ஆர்வம் கொள்ளவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கபடி, கைப்பந்து, இறகுப்பந்து, ஈட்டி எறிதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், செஸ், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது பாபநாசம் குறுவட்ட அளவிலான போட்டிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து குடியரசு தின விழாவுக்கான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் நடக்க உள்ளது. இதுகுறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், மாணவர்களுக்கு கல்வியை போன்று உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். விளையாட்டு போட்டிகளே அதற்கான அடிப்படை ஆதாரமாகும்.
தற்போதைய இளம் தலைமுறையினர் செல்போன்களை அதிகளம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மாணவர்கள் வீடுகளில் பாடங்களை படிப்பதில்லை. செல்போன் திரையை பார்த்தபடி விழி உறங்காமல் இருக்கின்றனர். இதனை தடுக்க பள்ளி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்கு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி தொடங்கப்படும். இதில் பங்கேற்க வீட்டுப்பாடங்களை முடித்திருக்க வேண்டும் என்ற நூதன நிபந்தனையை விதித்தோம். வீடுகளில் மாணவர்கள் வீட்டுப்பாடங்களை முடித்து வர தொடங்கினர்.இதனால் கல்வியும், விளையாட்டும் ஒரு சேர மேம்படுகிறது. கடந்த ஆண்டு எறிபந்து போட்டியில் எங்கள் பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றியை நழுவவிட்டார்.
வருங்காலங்களில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே பள்ளியின் இலக்காகும். அதற்காக மாணவர்களை முழுவீச்சில் தயார் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அரசு பள்ளியின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் பாராட்டு குவிகிறது.