போர் நிறுத்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அமைதி நிலவி வந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன், ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் நேற்று உஷார் நிலையில் வைக்கப்பட்டிருநதனர்.
இந்த நிலையில், நேற்று இரவு 7.40 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென போர் நிறுத்தத்தை மீறி பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இநதிய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதல் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏர்போர்ட்கள் உஷார்: நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களுக்கு செப்டம்்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சமூக விரோத சக்திகள் அல்லது தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றிய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.