போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் சிரியாவில் ஹிஸ்புல்லா ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
டெல் அவிவ்: சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஹமாஸ் போரின் ஒருபகுதியாக ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து வரும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்கள் நடத்தி வந்தது. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் மூலம் கடந்த புதன்கிழமை முதல் இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தாலும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. சிரியா கிளர்ச்சியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அலெப்போ மாகாணத்தின் மீது பயங்கர தாக்குதலை நடத்தினர். இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆயுதங்களை கடத்துவதற்காக சிரியாவில் செயல்பட்டு வந்த தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுகுறித்து சிரியா அதிகாரிகளோ, அந்நாட்டில் போர்களை கண்காணிக்கும் அமைப்புகளோ அல்லது ஹிஸ்புல்லா படையினரோ எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.