48 மணி நேர போர் நிறுத்தம் மீறல் ஆப்கன் மீது பாக். குண்டு மழை 3 கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்
காபூல்: பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதால், இலங்கை, பாகிஸ்தானுடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர் மோதல் நடக்கிறது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு பாக். ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் 48 மணி நேர தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்தன. அந்த போர் நிறுத்த நேரம் முடிவடையும் முன்பு பாகிஸ்தான் தரப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் உட்பட 10 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கோரத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உடன் நவம்பரில் தொடங்க இருந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ‘பாகிஸ்தானிய தலிபான்களுடன் தொடர்புடைய ஹபீஸ் குல் பகதூர் குழு என்ற உள்ளூர் தீவிரவாதிகளை குறிவைத்தே துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன’ என்று கூறியுள்ளார்.
* பாக்.-ஆப்கன் மோதலை தீர்ப்பது எனக்கு ஈஸி: டிரம்ப்
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலை தீர்ப்பது எனக்கு எளிதான ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
* கத்தாரில் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான், ஆப்கன் மோதல் குறித்து கத்தாரின் தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தலிபான் பிரதிநிதிகள் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப் முஜாஹித் மற்றும் உளவுத்துறைத் தலைவர் முல்லா வாசிக் ஆகியோர் இடம்பெற்றனர். பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தலைமையிலான உயர்மட்டக் குழு கத்தார் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.